Sunday 1 November 2020


என் கவிதைகள் 


என் கவிதைகள் 
வெறும் கவிதைகள் அல்ல.
அவை 
உன்  பொய்விழி குளத்தில்
கண்டெடுத்த  
சிகப்பு  முத்துக்கள்.

என் கவிதைகள் 
வெறும் கவிதைகள் அல்ல.
அவை...
என் மண அனைகட்டில்
தேங்கி நிற்ககும்
உன் கருப்பு நினைவுகள்.

என் கவிதைகள் 
வெறும் கவிதைகள் அல்ல.
அவை..
உன் நினைவு தாக்குதலால்
என் இதயம் பெற்றெடுத்த
பச்சை குழந்தைகள்.

என் கவிதைகள் 
வெறும் கவிதைகள் அல்ல.
அவை..
என் கண் வானத்திலிருந்து
உதிர்ந்த உவர்ப்பு
நட்சத்திரங்கள்.

என் கவிதைகள் 
வெறும் கவிதைகள் அல்ல.
அவை...
உன் பசப்பு  நினைவுகளை
சித்தரிக்கும்
கசப்பு சான்றுகள்.

என் கவிதைகள் 
வெறும் கவிதைகள் அல்ல.

Saturday 9 February 2019


மக்கு மாடு

ஏழுலகம் என்கிறார்கள்
நான் அறிந்த ஒரே உலகம்
அலுவலகம்.

அலுவலகமே முழுஉலகம்
என்றானபின்
எனக்கென்று இருக்கவில்லை
தனிஉலகம்.

வெளி உலகம் அறிந்தபின் தான்
தெரிந்து கொண்டேன்
செக்கு மாடு போல்
சுற்றி வந்த மக்கு மாடு
நான் என்று.

உழைப்பால் நான்
ஒருபோதும்  களைத்து போகவில்லை,
ஆனால்...
உழைத்தால் தான்
பிழைக்கலாம்  என்ற
என் நம்பிக்கை தான்
சற்று  இளைத்து போனது.

கோப்புகளுக்குள்ளேயே
புதைந்துகிடந்த நான்,
இந்த சோப்புகளின்
மகிமையை அறிந்திருக்கவில்லை.

பள்ளிகூட காலத்தில்
வகுப்பறையில்
கொக்கு பிடித்திருக்கின்றேன்,
ஆயினும்...
காக்கா பிடிக்க
கற்றுக்கொள்ளவில்லை.

உழைக்க
கற்றுக்கொண்ட நான்,
இனியேனும்
பிழைக்க
கற்றுக்கொள்ள வேண்டும்.

Friday 8 September 2017


நான் அழுவதில்லை


நான் அழுவதில்லை.
காரணம் ...
எனக்கு வலியில்லை
எனக்கு துக்கமில்லை
எனக்கு துயரமில்லை
எனக்கு சோகமில்லை
-என்று அர்த்தமில்லை.

ஆண் அழுவதற்கு
சமூகத்தில்
உளபூர்வ அனுமதியில்லை
என்பதனால்தான்
நான் அழுவதில்லை.

கொஞ்சம்  அனுமதி கொடுத்துப்பாருங்களேன்...

அந்த வான் அழுதால்
இந்த பூமி மட்டும்தான்
சிரிக்கும்.
நான் அழுதால்
இந்த பூமியோடு
சேர்ந்து
அந்த செவ்வாய் கிரகமும்
சிரிக்கும்.

Saturday 17 September 2016


உன்னை எனக்கு பிடிக்கவில்லை

உன்னை எனக்கு பிடிக்கவில்லை
உன் உறவை எனக்கு பிடிக்கவில்லை
உன் கண்னை எனக்கு பிடிக்கவில்லை
அதிலுள்ள களவை எனக்கு பிடிக்கவில்லை
ஓடிப்போய்விடு.

உன் வாயை எனக்கு பிடிக்கவில்லை
அதிலிருந்து வரும் பொய்யை
எனக்கு பிடிக்கவில்லை
உன் நெஞ்சை எனக்கு பிடிக்கவில்லை
அதிலிருக்கும்  நஞ்சை
எனக்கு பிடிக்கவில்லை
ஓடிப்போய்விடு.

உன் கையை எனக்கு பிடிக்கவில்லை
அதிலுள்ள கரையை
எனக்கு பிடிக்கவில்லை
உன் காலை எனக்கு பிடிக்கவில்லை
அது செல்லும் பாதை
எனக்கு பிடிக்கவில்லை
ஓடிப்போய்விடு.

நல்ல வார்த்தையில் சொல்லுகின்றேன்
ஓடிப்போய்விடு,
உன்னை போலவே கெட்டு
கெட்ட வார்த்தையாய்  மாறும்  முன்பே
ஓடிப்போய்விடு
உன்னை எனக்கு பிடிக்கவில்லை.

Monday 7 December 2015



கற்க கசடற...

இன்னாத  வைகளை எல்லாம்
எண்ணாதவனாகத்தான்
இருந்தேன்.

அல்லாத சொற்களை எல்லாம்
மெல்லாதவனாகத்தான்
இருந்தேன்.

எரிந்துவிழும் குணங்களை எல்லாம்
தெரிந்து கொள்ளாதவனாகத்தான்
இருந்தேன்.

ஒழுங்கின்மைகளை எல்லாம்
சகித்து  கொள்ளாதவனாகத்தான்
இருந்தேன்.

இந்த பொல்லாத வைகளை எல்லாம்
கல்லாதவனாகத்தான்
இருந்தேன்.

இன்னமும் என்னவெல்லாம்
கற்க வேண்டுமோ....
இந்த உலகத்தோடு ஒன்றி வாழ.

Saturday 8 August 2015

மதியாரை இனம் காண்

மதியாரை இனம் காணும்
அதி மதியே வெகுமதி.
மதியாத மனிதர்களை
உதறுவதே மரியாதை.

ஒட்டாத கூட்டத்துடன்
ஒட்டாதிருப்பதே நல்ல பயன்.
செல்லாத காசுகளை
சேர்த்துவைத்து என்ன பயன்.

பண்பாடு  இல்லாரோடு
வேண்டாம்  உடன்பாடு.
பாம்போடு சேர்ந்திருத்தல்
இயலாத பெரும்பாடு.

பண்பின்றி நடப்போரின்
முகம் காணாது விலகு.
மானமுள்ள மனிதருக்கு
அதுவே  அழகு.

மெய்யான பொய்யர்களை
குப்பையில் போடு.
நோவுக்கும் செல்லாதே
அவர்தம் சாவுக்கும் செல்லாதே.

Saturday 16 May 2015

மகிழ்வு

நினைத்ததெல்லாமே நடந்தது
கேட்டதெல்லாமே கிடைத்தது
முயன்றதெல்லாமே முடிந்தது.

விரும்பிய கல்வி ,
விரும்பிய வேலை.
அருளுக்கும்  குறைவில்லை
பொருளுக்கும் குறைவில்லை.

எந்த வெற்றிக்கும் வேள்வி இல்லை
தோல்வி என்று  கேள்வியே இல்லை.

உதாசினபடுத்தாத உறவினர்கள்
ஏமாற்றம் தராத நன்பர்கள்
குதறி  எடுக்காத  குடும்பத்தினர்.

எவருக்கு  கிடைக்கும்
இந்த வாழ்வும்,இந்த யோகமும்.
எல்லாமே என் பாக்கியம்!

இந்த  பகல் கனவுகளே
நம் மகிழ்வுக்குத்தானே...