மக்கு மாடு
ஏழுலகம் என்கிறார்கள்
நான் அறிந்த ஒரே உலகம்
அலுவலகம்.அலுவலகமே முழுஉலகம்
என்றானபின்
எனக்கென்று இருக்கவில்லை
தனிஉலகம்.
வெளி உலகம் அறிந்தபின் தான்
தெரிந்து கொண்டேன்
செக்கு மாடு போல்
சுற்றி வந்த மக்கு மாடு
நான் என்று.
உழைப்பால் நான்
ஒருபோதும் களைத்து போகவில்லை,
ஆனால்...
உழைத்தால் தான்
பிழைக்கலாம் என்ற
என் நம்பிக்கை தான்
சற்று இளைத்து போனது.
கோப்புகளுக்குள்ளேயே
புதைந்துகிடந்த நான்,
இந்த சோப்புகளின்
மகிமையை அறிந்திருக்கவில்லை.
பள்ளிகூட காலத்தில்
வகுப்பறையில்
கொக்கு பிடித்திருக்கின்றேன்,
ஆயினும்...
காக்கா பிடிக்க
கற்றுக்கொள்ளவில்லை.
கற்றுக்கொண்ட நான்,
இனியேனும்
பிழைக்க
கற்றுக்கொள்ள வேண்டும்.