Tuesday, 27 November 2012


விருப்பம்

தான் விரும்பி தனக்கு கிடைக்காத
எல்லாமே
எனக்கு கிடைக்கவேண்டும் என்று
என் அப்பா விரும்பினார்.

அவர் விரும்பியது
எல்லாமே எனக்கு கிடைத்தது.

நான் விரும்புவது ஒன்றேஒன்றுதான்-
என் மகன் விரும்புவதாவது
அவனுக்கு கிடைக்கவேண்டும்
என்பதுதான்.

Wednesday, 14 November 2012


பொய்

நானும் உன்னிடம்
பொய் சொல்லியிருக்கிறேன்
நீயும் என்னிடம்
பொய் சொல்லியிருக்கிறாய்.

காலம்தான் உண்மைகளை
உணர்த்திவிடுமே.-
இருவருமே பொய்களை
அடையாளம் கண்டுவிட்டோம்.

நான் சொன்ன பொய் அனைத்துமே
உன்னை நேசிப்பதற்காக
சொல்லப்பட்டது.
நீ சொன்ன பொய்யில்
பிரதாணமானது
என்னை  நேசித்ததாக
சொன்னதே...
.


Tuesday, 30 October 2012

இறைவா...

கடுமொழியையும் சுடுவிழியையும்
கடுகடு முகத்தையும்
நான் காட்டுவதற்கு
பலரையும் எனக்கு காட்டியவனே...

சிரிப்பையும் சிலிர்பையும்
கனிவையும் காதலையும்
நான் காட்டுவதற்கு
எவரேனும் ஒருவரையாவது
அடையாளம் காட்டுவாயோ?


Saturday, 20 October 2012

ஏழைக்கு ஏற்ற காலம்

மயிலுக்கு வேண்டுமானால்
மழை பிடிக்கும்
ஏழை எங்களுக்கு
வெயில்தான் பிடிக்கும்.

வீட்டுக்குள்லேயே நனைகின்றோம்
தொப்பலாக,
இந்த மழையிலே
வீடே மிதக்கின்றது கப்பலாக.

எங்கள் குடையே வீடுதான்
அந்த கோடையிலே,
ஆனால் ...
எங்கள்  வீட்டுக்கே குடை வேண்டும்
இந்த மழையிலே.

காய்ந்து கிடந்தாலும்
ஓய்ந்து வீட்டுக்கு வந்தால்,
சாய்ந்து கொள்ளவாவது
இடமுண்டு  அந்த கோடையிலே.

வீட்டுக்குள்ளே குடைபிடிக்கும்
இந்த மாரி காலத்தைவிட,-

குளித்துவிட்டு வருவதற்குள்
துவைத்து வைத்த
நைந்துபோன எங்கள்
துணி காய்ந்திருக்கும்
அந்த கோடை காலம்தான்
ஏழை எங்களுக்கு ஏற்ற காலம்.

மயிலுக்கு வேண்டுமானால்
மழை பிடிக்கும்
ஏழை எங்களுக்கு
வெயில்தான் பிடிக்கும்.


Tuesday, 16 October 2012


சாமியே நீயே சொல்லு

வாழ பிடிக்காதவனுக்கு
சாக வழியிருக்கு,
சாக பிடிக்காதவனுக்கு
வாழ வழியிருக்கா? -
சாமியே நீயே சொல்லு.

விரும்பி பிறக்கவில்லை
என்றாலும் வாழ்கின்றோம்,
விரும்பி சாகவில்லை
என்றாலும்  சாகின்றோம்.

ஆனால்..
வாழ்ந்து முடிந்தபின் சாவதா
அன்றி
வாழமுடியாமல் சாவதா?  -
சாமியே நீயே சொல்லு.

காற்றும் நீரும், செடியும் பயிரும்,
நிறைந்த பூமி  வாழத்தானே? -
அன்றி
சாக புதைக்கவா? -
சாமியே நீயே சொல்லு.

வாழ நிலமில்லாமல், வாழ வழியில்லாமல்
இந்த அகண்ட பூமியிலே பிறப்பெதற்கு?-
சாமியே  நீ எதுவுமே சொல்ல வேண்டாம்
படைப்பதையே  நிறுத்து.

ஆயிரமாயிரம் கிரகங்கள் இருக்கு,
அதோடு பூமியும் இருந்து தொலைக்கட்டும்-
ஜீவராசியில்லா
மலட்டு கிரகமாய்.

Monday, 8 October 2012

காதல்

”நீ தூக்கி எறிந்த
எல்லா பொருள்களையும்
பொறுக்கி எடுத்து பத்திரமாக
வைத்திருக்கும் நான்,-
நீ தூக்கி எறிந்த என்னை மட்டும்
தொலைத்து விடுவேனோ?

காறி உமிழ்ந்தாலும் அது
நீயாகத்தான் இருக்க வேண்டும்.
எட்டி உதைத்தாலும் அது
உன் காலாகத்தான் இருக்க வேண்டும்.
வெட்டி புதைத்தாலும் அது
உனக்காகத்தான் இருக்க வேண்டும்.

ஓடி போடா நாயே - என்று
நீ சொன்னாலும்
உன் காலை நக்கும்
நாயாகத்தான் நானிருப்பேன்” -

என்று சுரனையற்று
வசனம் பேசும்
இந்த இழிநிலைதான்
காதலோ...

அட ...ச்சீ...



Sunday, 30 September 2012



 நாம் கேட்க நினைப்பதெல்லாம்

இந்த அநியாயத்தை தட்டிக்கேட்க
யாருமே இல்லையா” - இந்த குரலுக்கு
யாராவது வரவேண்டும்.

நாம் கேட்க நினைப்பததெல்லாம்
யாராவது கேட்க வேண்டும்.
நாம் செய்ய நினைப்பததெல்லாம்
யாராவது செய்ய வேண்டும்.

நமக்கான எல்லாவற்றிற்காகவும்
யாராவது
எல்லாவற்றையும் தியாகம் செய்து
போராட வேண்டும்.

போராடுபவர்களை விமர்சனம்
செய்வதை தவிர
நாம் என்ன செய்ய போகின்றோம்.

Wednesday, 26 September 2012



விபத்து 

சாலையில் நடந்து வந்த
அவளை ,
வாகனத்தில் கடந்து  சென்ற
நான்தான் பார்த்தேன் என்றால்,-
எதிரில் வந்த அவனுமா
பார்க்க வேண்டும்.

அவன் மருத்துவமனையில்
நான் காவல் நிலையத்தில்.

அவளோ  ஏதுமேயறியாமல்
மறுபடியும்
சாலையிலே...



   

Monday, 24 September 2012

கவசம்

எதிரிகள் என்று 
யாரையும் இதுவரை
நான் அடையாளம்
காணவில்லை.

அதனால்,
என் நெஞ்சுக்கு
கவசம் தேவைபடவில்லை.

கவசம்  தேவைபடுவது
என் முதுகுக்குத்தான்.

Saturday, 15 September 2012

பயிற்சி

எனக்கு விருப்பமானவற்றை
அடிக்கடி பட்டியலிடுவேன்.-அவற்றை
என்னிடமிருந்து சற்று
விலக்கிவைப்பேன்.

என் கண்ணுக்கு பிடித்தவற்றை
காணமாட்டேன்,
செவிக்கு பிடித்தவற்றை
கேட்கமாட்டேன்,
நாவிற்கு பிடித்தவற்றை
உண்ண மாட்டேன்,
மனதிற்கு பிடித்தவருடன்
பேச மாட்டேன்.

பிடித்த உடையை கூட
உடுத்த மாட்டேன்.

காலை எழுந்தவுடன் ஜிம்
இரவு படுக்கும் முன் தம் - இப்படி
என் இதயத்திற்கு இணக்கமான
நல்லவை, அல்லவை
எல்லாவற்றிலிருந்தும்
அடிக்கடி விலகி நிற்ப்பேன்.

உணவு இருக்கும் போது
உண்ணாவிரதம் இருப்பது போல,
விருப்பமானவற்றையே
விலக்க முடிந்துவிட்டால்...
ஏமாற்றத்தை ஜீரனிப்பது
எளிதல்லவா!.


Thursday, 30 August 2012

சொல்லாமலே..

உரைப்பதற்க்கு முடியவில்லை,
மனதை
மறைப்பதற்க்கு  தெரியவில்லை.

சம்மணம் கட்டிக்கொண்டு,
நீ அமர்ந்திருக்கும்
எம்மனம்,
மறைப்பதிற்கில்லா
அம்மணம்.

எமக்கு
மானத்தை மறைப்பதற்குத்தான்
தேவையேயன்றி,
மனதை மறைப்பதற்க்கு அல்ல  -
கோவணம்.

மனதை காட்டுவதற்க்கு
ஆவணம்
என்பது அவமானம்.

கண் கண்டாலே
என் நெஞ்சரியும்.

உணர்வுகள் உணர்ந்து
கொள்ளபட   வேண்டும்
சொல்லாமலே...

உள்ளங்கள் ஒன்றுபட
வேண்டும்
தன்னாலேயே..

உரைக்கவும் மாட்டேன்
மனதை
மறைக்கவும்  மாட்டேன்.

Sunday, 19 August 2012



சண்டை


சண்டை என்னவோ
அம்மாவுக்கும்  அப்பாவுக்கும் தான்,
ஆனால்...
அடி விழுவதெல்லாம்
குழந்தைகளுக்குத்தான்.  

Saturday, 11 August 2012


காதல் வந்ததே...

சாதத்தில் கூட நாட்டமில்லை
உன்னை சந்தித்த மாதத்திலிருந்து.
சோகத்தில் கூட வாட்டமில்லை
உன்னை சிந்தித்த நேரத்திலிருந்து.

திண்ணையில் நின்று கொண்டு
தென்னையை பார்தால் கூட,
அதில் உன்னை பார்ப்பதாய்
காகிதத்தில் எழுதிவைத்து
அதை கவிதை என்கின்றேன்.

அழுக்கு சட்டை அணிந்து
ஊரையே வலம் வரும் நான்,
இப்போது, வாசலில் நிற்பதென்றாலும்
சலவை சட்டைதான்.

விடியல் பொழுதையே காணாத நான்,
இப்போது,  நீ கோலமிடுமுன்
வாரி சுருட்டி எழுகின்றேன்.

மண் மீது ஆசையில்லை
பொன் மீது ஆசையில்லை
உன் மீது ஆசை கொண்டேன்..
ஆம்...பிதற்றுகின்றேன்.

கடப்பாரையாலும்
அசைக்க முடியாத
என் இதயத்தை,- வெறும் உன்
கடைபார்வையால் அசைத்துவிட்டாய்!.

Tuesday, 7 August 2012


உழவனின்  நிலை 

ஏர பூட்டி சேர சேத்து,
சேத்துகுள்ள நாத்த நட்டு,
நாத்துகுள்ள உயிரை வைத்து, 
பாத்து  பாத்து பயிர் வளர்த்தோம். 
  
நாத்து  பட்டு போகாம ,
பயிர்  காத்தடித்து சாயாம,
கால நேரம் பாக்காம, 
எலி விரட்டி, வெட்டுகிளி விரட்டி
காத்து காத்து பயிர் வளர்த்தோம்.

பூச்சி பாத்து  மருந்தடிச்சு,
நேரம் பாத்து உரம்  போட்டு,
மரம் போல  பயிர் வளர்த்தோம்.
  
விளைந்த  பயிரை 
காய வைத்து,
காய்ந்த பின்னே  கதிர் அறுத்து,
அறுத்த பயிரை கதிரடிச்சு,
பதர் பிரிச்சு, நெல் பொறுக்கி-
அடுக்கி  வைத்தோம் மூட்டை  கட்டி.

அதை அத்தனையும்  யாருக்கோ
வண்டி  ஏத்தி 
அனுப்பி நின்னோம்  கையை கட்டி. 
---------------------------------------------------------
 உமிழ் நீர் விழுங்கியே,- எங்கள் 
 உயிர்  வளர்த்தோம்.
 கண்ணீர் விட்டே,-நாங்கள் 
 பயிர் வளர்த்தோம்.
 அதை  நன்றாய் தின்றே ,- நீங்கள் 
 வயிறு  வளர்த்தீர்.
 அழுது அழுது  உழுதவனுக்கோ...
 ஒரு முழம்   கயிறு தந்தீர்.                          

Thursday, 2 August 2012



 குழந்தையின் மனது 

'' நீ நல்லா படிச்சி,
  பெரியவனாகி,
  நிறைய சம்பாதித்து ...."-

  தந்தை முடிப்பதற்குள்,
  குழந்தை சொன்னது,-

 '' நிறைய பொம்மைகள் 
  வாங்குவேன்" - என்று.  

Saturday, 28 July 2012


கைகள் இரண்டும்
பிணைந்தே  இருப்போம்.-
தோளின் மீது  கைகள்
போட்டே நடப்போம் .-
என்னை,- நீ தாங்கு,
உன்னை,- நான்  தாங்குகிறேன்.

அஞ்சாதே ...
கண் துஞ்சாதே ....

வீழ்ந்துவிடுவோம்  என்று
எண்ணியவர்கள்  எல்லாம்
வியந்து போகவேண்டும்.

மானம்தான் பெரிது.-
வேட்டியை இறுக்கி கட்டு.-
புறப்படு ...

இன்றாவது,
சாக்கடைக்குள் வீழ்ந்துவிடாமல்
வீட்டுக்குச்செல்வோம் .

....போதை நண்பர்கள் .



Thursday, 12 July 2012



அன்றுதான் அவளை
முதலில் பார்த்தேன்.

ஏனோ... அவள் முறைத்தாள்.
மறுநாளே சிரித்தாள்.

அடுத்தடுத்த நாட்களில்...

வழிந்தாள்,
பழித்தாள்.

கெஞ்சினாள்,
கொஞ்சினாள்.

தினமும் ஒரு முகம் காட்டுகின்றாள் -
யாருடனோ
செல்போனில் பேசிக்கொண்டு போகையிலே!



Tuesday, 10 July 2012

மொழி

"தமிழ் மட்டும் பத்தாதுடா, 
 உம் மவனுக்கு 
 இந்தியும் சேத்து 
 சொல்லி கொடு "

"இந்தி படிச்சா.., 
 இந்தியாவுக்குள்ள மட்டுந்தான்,
 இங்லீச  சொல்லி கொடு "

"இங்லீச வெச்சிகிட்டு 
 ஐரோப்பா  போகமுடியுமா...?"

" ஜப்பான் போவனும்னா  ..,
  சைனா   போவனும்னா..."

"சைலன்ட்... "- கதவை திறந்து கொண்டு 
 நர்ஸ் வந்தாள்.
"குழந்தய  பார்கிரவங்கெல்லாம்   
 வாங்க"

Monday, 9 July 2012



குடி

புத்தி கெட்டு, சக்தி கெட்டு,
குடல் கெட்டு, உடல் கெட்டு,
குடி கெட்டு, குலமும் கெட்டு,

ஊர் வெறுக்கும் பேர் ஆகி,
தாயும் வெறுக்கும் சேய்யாகி, -

மண்னாகி முடியும், -
அரிய
இந்த மாந்தர் பிறவி.

என்று மடியும்...
இந்த குடியின் தாகம்.


அரிதல்ல அரிதல்ல...


அரிதல்ல அரிதல்ல மானிடராய்
பிறப்பது அரிதல்ல.
மானிடராய் பிறந்தவர் மானிடராய்
வாழ்வதே அரிது.

பயிர்களுக்கு மத்தியிலே
களை வளர்வது அரிதல்ல,
களைகளுக்கு மத்தியிலே
பயிராக  வளர்வதே அரிது.

உறவு என்று கூறி
கை கொடுப்பது அரிதல்ல,
அவர்தம்  உயர்வுக்கும்
கை கொடுப்பதே அரிது.

வாழ்ந்து முடிந்த பின்
சாவது அரிதல்ல,
செத்து மடிந்த பின்னும்
வாழ்வதே அரிது.

பறவையை போல்
வானத்தில் பறப்பது அரிதல்ல
மீனை போல்
தண்ணீரில் நீந்துவது அரிதல்ல
தரையிலே மனிதனாக
நடப்பதே அரிது.

அரிதல்ல அரிதல்ல மானிடராய்
பிறப்பது அரிதல்ல.

Thursday, 5 July 2012

பட்டாசு

அன்று...
நான் கேட்டும்
எனக்கு வாங்கிக்கொடுக்காத -
என் தந்தை,

இன்று...
நான் தடுத்தும் - என் மகனுக்கு
வாங்கித்தருகிறார்.


காசை ஏண்டா இப்படி
கரியாக்குகிறாய் -
என்று, - அப்பா
எப்பவோ சொன்னது -

ஞாபகம் வருகிறது - என் மகன்
 பட்டாசு வெடிக்கையிலே...

மாலை நேரத்து
மயக்கத்தில்,-
தேவதை, - என்று
அழைத்தவன்,

காலை நேரத்து
தெளிவில்,-
கேட்கிறான்...

“நீ மனுசியா”...

Wednesday, 4 July 2012

பாலோடு கலந்துவிட்ட
தண்ணி போல்,
என்னோடு கலந்துவிட்ட
உன்னை,
யாராலும் பிரிக்கமுடியாது
என்றேனே...

அன்னமாக வளர்ந்து
வருகிறாளே
உன் தங்கை!...
திருமணம்

புதிதாக திருமணம்,-
புதிதாக மாமனார், புதிதாக மாமியார்.
புதிதாக என்னை ஒருவன்
மாமா என்கிறான்,
நான் ஒருவனை
மாமா என்கிறேன்.

புதிய இடம், புதிய வேடம்.

மனைவி புதிது,
கட்டில் புதிது,
வந்த உறவுகள் எல்லாம் புதிது,
வரும் இரவுகள் எல்லாம் புதிது.

புதிது, புதிது எல்லாமே புதிது...
இந்த விருந்து புதிது,
உபசரிப்பு புதிது,
மரியாதை புதிது.

ஆனால்...
எனக்கு நான் பழையவன் தானே.

என்னில்,
என் கண்ணில்,
என்றும் உன் பழைய நினைவுகள்தான்.


நினைவுகள்

உன் நினைவுகளை
ஞாபகப்படுத்தும் எல்லாவற்றையும்
அழித்துவிட்டேன்.

மிச்சமிருப்பது...
உன் நினைவுகள் மட்டும்தான்.
விசுவாசம்


 ரப்பர் பல்லிகே
 பயந்தவன்தான்,

 எஜமானின் ஆணை
 என்றால்,
 நிஜமான யானையையே
 அடிப்பான்.



அழகு ஒத்துப்போக வேண்டும்
அந்தஸ்து ஒத்துப்போக வேண்டும்

நிறம் ஒத்துப்போக வேண்டும்
தரம் ஒத்துப்போக வேண்டும்

உயரம் ஒத்துப்போக வேண்டும்
உதிரம் ஒத்துப்போக வேண்டும்

ஆனால்...

திருமணம் மட்டும்
ஆணுக்கும் பெண்ணுக்கும்.

Tuesday, 3 July 2012

கண்ணா என்றாள்
கண்ணே என்றேன்.

மன்னா என்றாள்
மணியே என்றேன்.

அண்ணா என்றாள்
ச்சீ... நீ பெண்ணா என்றேன்.

ஒரு தீபாவளி முடிந்த பின்பு... சொன்னார்கள்

அம்மா சொன்னாள்
துணி கடையில் ஏக கூட்டமென்று

பாட்டி சொன்னாள்
பலகார கடையில் ஏக கூட்டமென்று

பொண்ணு சொன்னாள்
வளையல் கடையில் ஏக கூட்டமென்று

பையன் சொன்னான்
வெடி கடையில் ஏக கூட்டமென்று

தாத்தா சொன்னார்
பொடி கடையில் ஏக கூட்டமென்று

ஆனால்...
அப்பா மட்டும் சொல்லவேயில்லை
வட்டி கடையிலும் ஏக கூட்டமென்று
அறிவு

பறட்டை தலையாய் இருக்கிறதே
என்று சுருட்டை தலையை பார்த்து
ஆசைப்பட்டேன், -
தலை கருப்பாக இருந்த போது.

பறட்டை தலையோ, சுருட்டை தலையோ
கருத்த தலையை பார்த்து
ஆசைப்பட்டேன், -
தலை வெளுத்த பின்பு.

கருப்போ, வெளுப்போ
கேசம் உள்ள தலையை
நேசமுடன் பார்த்தேன்,-
தலை வழுக்கையான பின்பு.

இப்போது
எந்த தலையையும் பார்த்து
ஆசை படுவதில்லை, - என்
வழுக்கை தலைக்கும் ஏதேனும்
ஆபத்து வந்துவிடுமோ என்று
பயந்துகொண்டு.

Monday, 2 July 2012


செய்யாமல் சாகாதே.

உணர்ச்சி என்பது
புணர்சியின் போது மட்டும்
இருந்தால் போதும் என்று
எண்ணிவிட்டாயா?

உன் வீரத்தையும்
தன்மானத்தையும்
எங்கேனும் வைத்துவிட்டாயா
அடமானம்.

உணவில்லாமல்
சாவதை காட்டிலும்,
உணர்வில்லாமல்
சாவதே அவமானம்.

செய் அல்லது செத்துமடி 
என்று சொன்னது
செய்யாமல் சாவதற்கு அல்ல,
சாவதற்கு முன்
செய்வதற்கு.

செய்யாமல் சாகாதே.




எல்லாவற்றிலும் எருமையைபோல்
இருப்போம்.,-
மழைபெய்தால் மட்டும்
குடைகேட்போம்.

குடைக்குள் எருமை.


                                                        

கல்யாணம் ஆகாதவன்

மீசை முளைக்கும் முன்பே 
ஆசை முளைத்தது.
மீசை நரைத்து விட்டது
இன்னும் ஆசை நரைக்கவில்லை.

நான் ஒன்றும் காமுகன் அல்ல
இன்னும் கல்யாணம் ஆகாதவன்.

என் கல்யாணமான நன்பர்களோ,
“கல்யாணமானவனுக்கு 
ஒரு பொண்டாட்டி
கல்யாணமாகதவனுக்கோ 
பல பொண்டாட்டி”- என்று 
என் ஒழுக்கத்தை 
வேடிக்கை பேசுகிறார்கள்.

என் ஒழுக்கத்தை பற்றி
பெருமை பேசிய 
என் அம்மா கூட,
“ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு
ஓடிவர துப்பில்லை”  என்கிறாள்.

என்ன செய்வது...
பாதி பெண்களை கருவிலேயே 
கொன்றுவிட்டோம்.
தப்பித்தவர்கள் எல்லாம்
இப்போது 
தாக்குகிறார்கள்.

எனக்குபிடித்த எந்த பெண்ணுக்கும்
என்னை பிடிக்கவில்லை.,
எனக்கு பிடிக்காத
எந்த ஒரு பெண்ணுக்கும் கூட
என்னை பிடிக்கவில்லை

அவர்களுக்கு
இறக்குமதியான அல்லது ஏற்றுமதிக்கு
தகுதியான ஆண்கள்தான்
வேண்டுமாம்.

உலகமய மாக்கலினால்
பாதிக்க பட்ட
பட்டியலில்
என் கல்யாணத்தையும்
சேர்த்துக்கொள்ளுங்கள்.