Wednesday, 13 November 2013

பூதம் வேண்டும்

அலாவுதீனின் விளக்கையும்
ஜீ பூம் பா ஜாடியையும்
அருங்காட்சி எங்கும்
தேடுவோம்.-
பூதம் ஒன்று நமக்கு வேண்டும்.

எண்ணியதை
எண்ணியபடி செய்யவும்
எண்ணப்போவதையும்
திண்ணமாக செய்யவும்
பூதம் ஒன்று நமக்கு வேண்டும்.

காலால் சொன்னதை
தலையால் செய்யும்,
சொல்லி முடிக்கும் முன்பே
செய்து முடிக்கும்,
இன்று சொன்னதை
நேற்றே செய்யும்
பூதம் ஒன்று நமக்கு வேண்டும்.

பாட்டிலில் அடைபட்ட
நம்  தலை முறை
தருதலை மனிதனை
விடுதலை செய்வது
நம்மால் முடியாது.

ஜாடியில் அடைபட்ட
பூதத்தையாவது
விடுதலை செய்து
இந்தியாவை
வல்லரசாக ஆக்குவோம்.

அலாவுதீனின் விளக்கையும்
ஜீ பூம் பா ஜாடியையும்
அருங்காட்சி எங்கும்
தேடுவோம்.-
பூதம் ஒன்று நமக்கு வேண்டும்.

Sunday, 3 November 2013

காத்திருப்போம்

விழித்திருக்கும் காரணத்தால்
விரைவாக விடியாது.-
விடியும் வரை காத்திருப்போம்.

காய் முதல் பார்த்திருந்தாலும்
பாய் போட்டு படுத்திருந்தாலும்
பழுக்கும் வரை காத்திருப்போம்.

காத்திருக்கும் காரணத்தால்
சாத்தியிருக்கும் கதவு திறக்காது .-
திறக்கும் வரை காத்திருப்போம்.

மின்னலில்லா வானமா...
ஜன்னலில்லா வீடா...
இன்னலில்லா வாழ்வா ...

எத்தனை முறை தோற்றாலும்
முடிவில்லா முயற்சியோடு
மடியும் வரை காத்திருப்போம்.



Saturday, 2 November 2013


காதல் மொழி

நெஞ்சமெனும் வெள்ளத்தில்
நீந்திடும் அன்னமே
எந்தன் உள்ளத்தை வாட்டுது
உந்தன் எண்ணமே.

காணாத உருவத்தில்
உந்தன் முகம்தான் தெரியுதே
கேட்காத அரவத்தில்
உந்தன் குரல்தான் கேட்குதே.

ஆலமர கிளையிலே
இரட்டை கிளி பேசுதே - அந்த
காதல் மொழி கேட்டுத்தான் -இந்த
ஒற்றை மனம் வாடுதே.

என்  கனவுகள்  யாவையும்
உன் நினைவுதான் ஆளுதே
என் நினைவுகள் யாவிலும்
உன் கனவுதான் வாழுதே

நின் திருமுகம் காணவே
தவம் தான் இருக்கின்றேன்
நின் தேன் மொழி கேட்கவே
சவம் போல் வருகின்றேன்.

உள்ளத்தை உரைத்திடவே
தேடி உனை வருகின்றேன்
தேவி முகம் கண்டவுடன்
ஊமையாகி போகின்றேன்.

நெஞ்சமெனும் வெள்ளத்தில்
நீந்திடும் அன்னமே
எந்தன் உள்ளத்தை வாட்டுது
உந்தன் எண்ணமே.

Friday, 6 September 2013

கடவுளே...

கடவுளே...
எங்களை உந்தன் கண்ணுக்கு
தெரியவில்லையா- இல்லை
உமக்கு கண்ணே தெரியவில்லையா?.

எங்களின் மொழிதான்
புரியவில்லையா- இல்லை
எந்த ஒலியுமே எட்டாத
இயங்கா செவியா உமக்கு?.

திட்டினால்தான் வாயை
திறப்பாயோ-
தட்டினால்தான் கதவை
திறப்பாயோ?
நீ என்ன கடவுள் தானே,-
அற்ப மனிதன் அல்லவே?.

உலகம் இயங்கதானே உயிர்கள்-
உயிர்கள் வாழத்தானே பயிர்கள்?.

மறுபிறப்பு என்று ஒன்றிருந்தால்..
என்னை கடவுளாக பிறக்க வை.
நல்ல கடவுளாக நானிருந்து
நல்ல மனிதர்களை
நான் காக்கின்றேன்.
நீர்  சற்று ஓய்வு எடுத்துக்கொள்ளும்.


Sunday, 1 September 2013

சொந்தங்களே..

சொந்தங்களே... உங்களுக்கு
என்ன ஆயிற்று.

ஞானம் பிறக்கும்
மரண வீட்டிலும் மண்டையை
உடைத்துக்கொண்டு சண்டை.
மகிழ்வு தவழும்
மண வீட்டிலும் கொண்டையை
பிடித்துக்கொண்டு சண்டை.

பிறப்பிலே தொடங்கி
வாழ்வோடு வளர்ந்து
இறப்பிற்கு பின்னரும்
தொடர்வதுதானே உறவு.

மரமாக இருந்தால்
தோப்போடு  இருக்க வேண்டும்.
காயாக இருந்தால்
குலையோடு  இருக்க வேண்டும்.
மனிதனாக இருந்தால்
குறைந்தபட்சம்
உறவுகளோடு மட்டுமாவது
ஒரு பினைப்போடு இருக்க வேண்டாமா?

வரவு பார்த்து வருவதுவா உறவு..!
விழும் முன்னே விழுதாக
வருவதுவே உறவு.
அழும் முன்னே அணையாக
தடுப்பதுவே உறவு.

இனத்தின் உடன்கூட
இனக்கம் இல்லா சுனக்கம்.
யாவரும் கேலி செய்யமாட்டாரோ..-
’யாவரும் கேளிர்’ என பாடியவரை.

சொந்தங்களே.. உங்களுக்கு
என்ன ஆயிற்று.

Wednesday, 31 July 2013

குறிப்பறிவு

கூறாமை நோக்கி குறிப்பறிதல் தானே
காதலின் தாய் மொழி.

வாய் மொழி துணைக்கு வராது
நீ சொல்ல தயங்கிய
உன் காதலை,
நீ சொல்லும்  முன்பே
அறிந்துகொண்டேன்.

குறிப்பறிவில்லா படிப்பறிவு
வீண் என்பார்கள்.

அதேபோல்...

நீ சொல்ல தயங்கி
நீ சொல்லும் முன்பே
நான் சென்றும் விட்டேன்.


Friday, 12 July 2013

ஞானம்


நாங்கள் தொலைந்து போனவர்கள் அல்ல
’தொலைந்து போ’
என்று போகச்சொல்லபட்டவர்கள்.

நாங்கள் ஆண் ஒன்று, பெண் ஒன்று
என்று-,
ஆசைக்கு ஒருத்தியையும்
ஆஸ்திக்கு ஒருத்தனையும் பெற்றவர்கள்.

நாங்கள் ஆசைக்கு  பெற்றவள்  
எவன்மீதோ ஆசை கொண்டு
ஓடிவிட்டாள்.
ஆஸ்திக்கு பெற்றவன்
ஆஸ்தியை பெற்றுக்கொண்டு
துரத்திவிட்டான்.

காலம் கடந்த தாமதமான
சிந்தனைதான்
ஆனால்.... தவிர்க்கமுடியவில்லை,-
’கருத்தடை செய்துகொண்டுதான்
கல்யாணமே செய்திருக்க வேண்டுமோ’.


Friday, 28 June 2013

கல்யாண கனவு

என்னை விட இளவயது
என் எதிர்வீட்டு தோழி,
தன் இரண்டாவது பிரசவத்திற்காக
தாய் வீடு வந்துள்ளாள்,
இன்னமும் நான்
பாவடை தாவணியிலேயே....

கல்வி வயது முடிந்துவிட்டது
கலவி வயதும் கடந்துவிட்டது
சொல்லப்போனால்
கிழவி வயது தொடங்கிவிட்டது
இன்னமும் நான்
செல்வியாகவே....

சமைஞ்ச நாள் முதல்
சமையலறையில்தான்
நான் சமைஞ்சதே சமைக்கத்தானோ...

ஜாதகத்தில் பாதகமாம்...
எத்தனை எத்தனை பரிகாரம்
எத்தனை எத்தனை பரிகாசம்.

ஆவணி வந்தால் கல்யாணம்
ஆண்டுதோறும் இதே லாவணி.
கல்யாண கனவு என்பார்கள்
என் கல்யாணமே கனவுதானோ..?, -
என்று
கல்யாணத்திற்காக காத்திருந்த
என் கவலைகள் எல்லாமே
கடந்த கால கவலைகள்.

ஆம்...
கல்யாணத்திற்காக காத்திருந்தது போல்
அதிக நாட்கள் காக்க வைக்கவில்லை
என் விவாக ரத்துக்கு.



Friday, 19 April 2013


வலி

என் தாயிடம் அடி வாங்கியிருக்கின்றேன்
தந்தையிடம் உதை வாங்கியிருக்கின்றேன்
தமக்கையிடம் கடி வாங்கியிருக்கின்றேன்
இன்னும் பலரிடமும்
இடியும் மிதியும் வாங்கியிருக்கின்றேன்.

ஆனால்...

உன்னிடமிருந்து மட்டும்தான்
வலி வாங்கினேன்.

Thursday, 28 March 2013


முதுமை

கற்களைகூட சக்கையாக
நொறுக்கிய
என் பற்களுக்கு வாயுடன்
என்ன பகையோ
ஆகிவிட்டதே பொக்கையாக.

மழைகால காட்டருவியாய்
வளர்ந்த என் சிகை,
தலையுடன்
என்ன பகையோ
கோடைகால குட்டையாக
வறண்டுவிட்டதே மொட்டையாக.

வானை தொடுவதுபோல்
நேரான தூண் போன்ற
என் முதுகுக்கு,
பூமியுடன்
என்ன நட்போ
வளைந்துவிட்டதே கூனாக.

சாய்வு நாற்காலியில்
பகல்  வெளிச்சமான இரவாகவும்,
இரவு  இருட்டான பகலாகவும்,
ஆகி போனபின்...
பசைபோல் ஒட்டிக்கொண்டிருக்கும்
பழைய நினைவுகளை மட்டுமே
ஒயாது அசைபோடும்,
என் மனதுக்கு மட்டும்
இல்லையப்பா
ஓய்வு.



Thursday, 10 January 2013


 எதற்கு இந்த பொங்கல் பண்டிகை

நெற்கள் விளைந்த வயல்களில்
புற்களைகூட காணமுடியவில்லை,-
இப்போது எதற்கு இந்த
பொங்கல் பண்டிகை.

யானையை கட்டி போர் அடித்தவர்கள்
ரேசன் கடைகளிலே
இலவச அரிசிக்காக
பூனையை போல்  நிற்க்கையிலே,-
இப்போது எதற்கு இந்த
பொங்கல் பண்டிகை.

பஞ்சு விழுந்த கண்களுடனும்
கூடு விழுந்த நெஞ்சுடனும்
கஞ்சி காணாத வயிறுடனும்
கிழவர்கள் மட்டுமே
இன்னமும் உழவர்களாக இருக்கையிலே
இப்போது எதற்கு இந்த
பொங்கல் பண்டிகை.

உழவர்களின் கண்களிலே
ஏக்கம் எரிமலையாய்
பொங்கிக்கொண்டிருக்கும் வேளையிலே
சட்டிபானையில் என்ன வேண்டிகிடக்கிறது
சக்கரை பொங்கல்.

முதலில் தினசரி பொங்கலுக்கு
வழி பிறக்கட்டும்
அப்புறம் கொண்டாடுவோம்
ஆயிரமாயிரம் விழா பொங்கல்
ஆனந்தமாய்.




Saturday, 5 January 2013



 நீ குனிந்து
 நடந்து  செல்லும் போதெல்லாம்
 அது உந்தன் அடக்கம் என்றுதான்
 நினைத்தேன்.

 ஆனால்..
 எனக்கு தெரியவேயில்லை
 என்னை அடக்கம் செய்யத்தான்
 நீ  இடம் தேடிக்கொண்டிருக்கின்றாய்
 என்று.