Friday, 6 September 2013

கடவுளே...

கடவுளே...
எங்களை உந்தன் கண்ணுக்கு
தெரியவில்லையா- இல்லை
உமக்கு கண்ணே தெரியவில்லையா?.

எங்களின் மொழிதான்
புரியவில்லையா- இல்லை
எந்த ஒலியுமே எட்டாத
இயங்கா செவியா உமக்கு?.

திட்டினால்தான் வாயை
திறப்பாயோ-
தட்டினால்தான் கதவை
திறப்பாயோ?
நீ என்ன கடவுள் தானே,-
அற்ப மனிதன் அல்லவே?.

உலகம் இயங்கதானே உயிர்கள்-
உயிர்கள் வாழத்தானே பயிர்கள்?.

மறுபிறப்பு என்று ஒன்றிருந்தால்..
என்னை கடவுளாக பிறக்க வை.
நல்ல கடவுளாக நானிருந்து
நல்ல மனிதர்களை
நான் காக்கின்றேன்.
நீர்  சற்று ஓய்வு எடுத்துக்கொள்ளும்.


Sunday, 1 September 2013

சொந்தங்களே..

சொந்தங்களே... உங்களுக்கு
என்ன ஆயிற்று.

ஞானம் பிறக்கும்
மரண வீட்டிலும் மண்டையை
உடைத்துக்கொண்டு சண்டை.
மகிழ்வு தவழும்
மண வீட்டிலும் கொண்டையை
பிடித்துக்கொண்டு சண்டை.

பிறப்பிலே தொடங்கி
வாழ்வோடு வளர்ந்து
இறப்பிற்கு பின்னரும்
தொடர்வதுதானே உறவு.

மரமாக இருந்தால்
தோப்போடு  இருக்க வேண்டும்.
காயாக இருந்தால்
குலையோடு  இருக்க வேண்டும்.
மனிதனாக இருந்தால்
குறைந்தபட்சம்
உறவுகளோடு மட்டுமாவது
ஒரு பினைப்போடு இருக்க வேண்டாமா?

வரவு பார்த்து வருவதுவா உறவு..!
விழும் முன்னே விழுதாக
வருவதுவே உறவு.
அழும் முன்னே அணையாக
தடுப்பதுவே உறவு.

இனத்தின் உடன்கூட
இனக்கம் இல்லா சுனக்கம்.
யாவரும் கேலி செய்யமாட்டாரோ..-
’யாவரும் கேளிர்’ என பாடியவரை.

சொந்தங்களே.. உங்களுக்கு
என்ன ஆயிற்று.