Sunday, 1 February 2015


திரு. நங்கை

'அரிது அரிது மானிடராக
பிறப்பதறிது'-
மானிடராகத்தான்  பிறந்தேன்...

'கூன் குருடு செவிடு பேடு
நீங்கிப் பிறத்தல் அரிது'-
நலமாகத்தான் பிறந்தேன்..

ஆம்..
ஆணாக  பிறந்தேன்
ஆனால்..
பெண்ணாக வளர்ந்தேன்.

அழியாத வலியுடன்
பாலினம் தொலைந்து
அலியாக  அலைந்தேன்.

அண்ணன் என்று அழைத்தவனை
அக்கா என்று அழைக்க
மறுத்தான் தம்பி.
மகனாக பெற்றவனை
மகளாக ஏற்க
மறுத்தாள் தாய்.
எதுவும் புரிய மறுத்து
தவித்தேன் நான்.

சமுதாயம்  என்னை ’வாடி’ என்று
அழைத்த போதுதான்
நான் ஓடி போனேன்.
தேடிவர யாருமில்லை
என்றபோது
வாடி போனேன்.
ராஜா என்ற நான்
ராணியாக மாறி போனேன்.

வேலைக்கா வீதி வீதியாக
அலைந்தேன்.
சேலை அணிந்த ஆணுக்கு
வேலையில்லை என்றார்கள்.

ஆம் ...
சேலை அணிந்த ஆணுக்கு
பகலிலே
வேலையில்லை என்றார்கள்
திரு.நல்லவர்கள்.